இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை பயிற்சி அமர்வின் போது தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இப்போட்டி முன்னர் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் அபிஷேக் சர்மா பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 79 ரன்களைக் குவித்திருந்தார். ஒருவேளை இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடாத பட்சத்தில் துருவ் ஜுரெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார். மேற்கொண்டு அணியின் தொடக்க வீரராக திலக் வர்மா அல்லது துருவ் ஜுரெல் ஆகியோரில் ஒருவர் சஞ்சு சாம்சனுடன் தொடக்கம் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
India 2nd T20I Probable Playing XI: அபிஷேக் சர்மா/துருவ் ஜூரல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹார்டிக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி.
Also Read: Funding To Save Test Cricket
England 2nd T20I Probable Playing XI : பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் வுட், ஜேமி ஸ்மித் (12ஆவது வீரர்)