புஜாரா மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்னும், டேவிட் மலான் 70 ரன்னும், ஹசிப் ஹமீது 68 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அதன்பின் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், கேப்டன் விராட் கோலி 45 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் புஜாரா மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “புஜாரா திறமையான பேட்ஸ்மேன். இதை அவர் எப்போதும் உணர்த்தி இருக்கிறார். சில நேரங்களில் நமது நினைவுகள் தான் அதை மறந்து விடுகின்றன.
நானும், புஜாராவும் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினோம். புஜாரா அதில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய திறமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங் ஒட்டு மொத்தமாக மோசமாக அமைந்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஜோடி நிலைத்து ஆடினால் நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
மேலும் இந்த டெஸ்டில் புஜாரா 91 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.