ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி, 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே!

Updated: Sun, Oct 10 2021 23:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்களையும், ரிஷப் பந்த் 51 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் உத்தப்பா அரைசதம் அடித்து அசத்தினார். 

அதன்பின் 63 ரன்களில் ராபின் உத்தப்பா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர், அம்பத்தி ராயுடு ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. 

இதற்கிடையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் அரைசதம் கடந்து, அதிரடியில் மிரட்டி வந்தார். அதன்பின் 70 ரன்களில் ருதுராஜ் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிபெற 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரை வீசிய டாம் கரண் முதல் பந்திலேயே மொயீன் அலியின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி, 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை