ஐபிஎல் 2021: சஹார், மொயீன் அபாரம்; பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!

Updated: Fri, Apr 16 2021 22:43 IST
Image Source: Google

 
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
 
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தீபக் சஹார் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வாலை முதல் ஓவரிலேயே வீழ்த்திய சஹார், அடுத்தடுத்து கெய்ல், ஹூடா விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
 
இதற்கிடையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சிங்கிள் எடுக்க முயன்று ரவீந்திர ஜடேஜாவின் அபாரமான பீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
 
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கான் 47 ரன்களைச் சேர்த்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
அதன்பின் வெற்றி இலக்கை விரட்டிய சென்னை அணியில் கெய்க்வாட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாப் டூ பிளேசிஸ், மொயீன் அலி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 
 
இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயீன் அலி 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்ப பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவும் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார். தொடர்ந்து  வந்த அம்பத்தி ராயுடுவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
 
இருப்பினும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஃபாப் டூ பிளேசிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சீசனின் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை