சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.
அதன்பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலின் அபார ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 139 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கே.எல் ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேஎல் ராகுல், “இன்று மைதானத்தில் மிகவும் வெப்பம் அதிகமாக இருந்தது. ஆனால் எங்களது திட்டம் மிக எளிமையானது தான்.
அணியில் உள்ள வீரர்கள் நல்ல காம்பினேஷன் உடன் விளையாடினார்கள். முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் 14 ஓவர்களில் சேசிங் செய்தால் பிளே ஆப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள். எனவே பேட்டிங் செய்யும்போது எங்களது திட்டம் தெளிவாக இருந்தது. அதனாலே முதல் பந்தில் இருந்தே அடிக்க தயாரானோம். இதுபோன்ற ஒரு போட்டி நாளில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நான் பந்துகளை கிளீனாக அடித்தேன்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஹேசல்வுட்க்கு எதிராக ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுமட்டுமின்றி புல் ஷாட் விளையாடவும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த போட்டியில் எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் நான் இதே போன்ற அதிரடி வெளிப்படுத்தவும், பிட்டாகவும் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் அடுத்து உலக கோப்பை தொடர் வர இருக்கிறது” என தெரிவித்தார்.