ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாம் தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 33 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதன்பின் 55 ரன்கள் எடுத்திருந்த வெங்கடேஷ் ஐயர், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
அதன்பின் 13 ரன்கள் எடுத்திருந்த ராணா, நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில்லும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் ரன் ஏதுமின்றி ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே ஈயான் மோர்கனும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசனும், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் கேகேஆர் அணி வெற்றிபெற 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் அடுத்த பந்திலேயே சுனில் நரைனும் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்துக்கு சென்றது. ஆனால் அடுத்த பந்தில் ராகுல் திரிபாதி சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதன் மூலம் கேகேஆர் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி விக்கெட் 3 வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் நாளை மறுநாள் துபாயில் நடைபெறும் ஐபிஎல் 14ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.