ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம்!

Updated: Thu, Apr 08 2021 16:43 IST
IPL 2021 : Mumbai Indians vs Royal Challengers Bangalore Match preview  (Image Source: Google)

கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் நாளை முதல் கோலாகலமாகத் தொடங்கப்படவுள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுடைய பலம், பலவீனம் குறித்த தகவல்களை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளது.

வலிமையான பேட்டிங் லைன் அப், அனுபவ பந்துவீச்சாளர் என சகல பலத்துடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறையும் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்றால் அது ஆச்சரியப்படும் விஷயமல்ல.

ஏனெனில் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கிறிஸ் லின், ஹர்திக் பாண்டியா போன்ற பவர் ஹிட்டர்களுடன், பும்ரா, ட்ரெண்ட் போல்ட், நாதன் குல்டர் நைல் போன்ற டெத் பவுலிங்கை கொண்டிருப்பது அணிக்கான கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 

ஆனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு தனது சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு இல்லாததால், அணியில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
 
இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மைதானங்களிலேயே மும்பை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள போது, இந்திய மைதானங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

ஐபிஎல் பட்டத்தை வென்றிராத மூன்று ஐபிஎல் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் (ஆர்சிபி) ஒன்றாகும். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்றே ஆக வேண்டியக் கட்டாயத்திற்கு ஆர்சிபியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி ஆளாகியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான் ஆர்சிபி பிளே-ஆஃப் கட்டத்திற்கு தகுதிப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் வரிசை எப்போதுமே நிலையற்றதாகவும், அவர்களின் பேட்டிங் சமீபத்திய ஆண்டுகளில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஜோடியை மட்டுமே சார்ந்திருந்தது.

ஆனால் நடப்பு சீசனில்மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், சச்சின் பேபி போன்ற அதிரடி நடுவரிசை வீரர்கள் அணியில் இருப்பது ஆர்சிபியின் பேட்டிங் வெற்றிடத்தை நிரப்பும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல் கைல் ஜேமீசன்,டேனியல் கிறிஸ்டியன்,டேனியல் சாம்ஸ் ஆகியோருடன் நவ்தீப் சைனி, முகமது சிராஜ் போன்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது அணிக்கு கூடுதல் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சு வரிசை என்றுமே எதிரணி வீரர்களை கலங்கவைக்கக் கூடியது. ஏனெனில்  யஷ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஆடம் ஜாம்பா போன்றவர்களின் சுழல் தாக்குதல் மட்டுமே பெங்களூருக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளை விடவும் பலம் வாய்ந்து திகழ்ந்தாலும், கோப்பையை வெல்லும் அளவிற்கான ஒருங்கிணைந்த ஆட்டம் ஆர்சிபி அணியிடம் இதுவரை வெளிப்படவில்லை என்பதுதான் சோகம். இந்த ஆண்டாவது ஆர்சிபி கோப்பையை வென்று, விமர்சனங்களை தகர்த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நேருக்கு நேர்

பெங்களூரு - மும்பை அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

மைதானம்

நாளைய போட்டி நடைபெறவுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாகும். இதுவரை இம்மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கைத் தேர்வுசெய்யும் அணிகளே அதிகமுறை வெற்றிபெற்றுள்ளன. இதனால் நாளைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணி விவரம்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யநா தாரே, அன்மோல்ப்ரீத் சிங், அன்குல் ராய், அர்ஜுன் டெண்டுல்கர், கிறிஸ் லின், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் பொலார்ட், குர்னல் பாண்டியா, மார்கோ ஜான்ஸன், மோஸின் கான், நாதன் கூல்டர் நீல், பியூஷ் சாவ்லா, குயின்டன் டீ காக், ராகுல் சஹர், சவுரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரன்ட் போல்ட், யுத்விர் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஃபின் ஆலன், ஏபி டிவில்லியர்ஸ், பவன் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், யஷ்வேந்திர சாஹல், ஆடம் ஜாம்பா, ஷாபாஸ் முகமது சிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பாட்டீதர், முகமது அசாருதீன், கைல் ஜேமீசன், டேனியல் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ் பாரத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை