ஐபிஎல் 2021: விறுவிறுப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 67 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அகர்வால் 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், தீபக் ஹூடா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை பறக்கவிட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளைப் பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.