ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வேறு வழியின்றி எஞ்சிய 31 ஆட்டங்களை பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு தலைவர் அர்ஜுன் டி சில்வா கூறுகையில், ''ஆம் கண்டிப்பாக நாங்கள் ஐபிஎல் தொடரை செப்டம்பரில் நடத்த அனுமதி கோருவோம். ஐக்கிய அரபு அமீரகம் தான் பிசிசிஐயின் தேர்வாக இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனாலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தால் அதை நிராகரிக்க எந்த காரணமும் இருக்க முடியாது.
லங்கா பிரீமியர் லீக் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே அதற்கு செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சரியான உட்கட்டமைப்பு களுடன் ஐபிஎல் தொடரை செப்டம்பரில் நடத்த தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவோம் என்று கூறிவரும் பிசிசிஐ, இத்தொடரை எங்கு நடத்துவது என்ற ஆலோசனையில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.