ஐபிஎல் 2021: ரஸ்ஸல் பந்துவீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட மும்பை!
ஐபிஎல் 14ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டி காக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமர் யாதவ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ரோஹித் சர்மாவும் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சேர்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினார்.