எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ஆம் தேதி துவங்கியது.
மொத்தம் 60 போட்டிகள் கோண்ட இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் தங்களது மிக சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னாள் வீரர்கள் பலரின் அதிகமான பாராட்டை பெற்ற இளம் வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கான் முக்கியமானவர். ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாருக் கான்“அணில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்களின் பாராட்டை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதிலும் கீரன் பொலார்ட் போன்ற வீரர்களுடன் என்னை ஒப்பிட்டு பாராட்டியது மிகப்பெரும் விசயம், ஆனால் நான் இப்பொழுது தான் எனது கிரிக்கெட் பயணத்தை துவங்கியுள்ளேன். எனவே எனக்கான தனி அடையாளத்தை உருவாக்குவதே எனது தற்போதைய இலக்கு.
என்னால் என்ன முடியுமோ அதை சரியாக செய்ய விரும்புகிறேன். பொல்லார்ட் போன்ற ஜாம்பவான்கள் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு அதிகமான மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. கீரன் பொலார்ட் மிக சிறந்த பேட்ஸ்மேன். பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுலும், பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர், இவ்வளவு நாள் தமிழ்நாடு அணிக்காக செய்ததையே பஞ்சாப் அணிக்காகவும் செய்து கொள், நீ பெரிதாக வேறு எதையும் மாற்றி கொள்ள தேவை இல்லை என என்னிடம் கூறிவிட்டனர்.
அணியின் பெயர் மட்டுமே மாறியுள்ளது, அதனால் நீ எதை பற்றியும் கவலை கொள்ளவோ, பயப்படவே தேவை இல்லை என்று கூறிவிட்டனர், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது” என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் தொடரில் தமிழ்நாடு அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம், ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் அணியில் 5.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஷாருக் கான் இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி அதில் 94 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.