ஐபிஎல் 2021: ஒன் மேன் ஷோ காட்டிய பிரித்வி ஷா; டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 45 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து 6 பவுண்டரிகளை விளாசி பதிலளித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரித்வி 18 பந்துகளில் அரைசதம் கடந்து எதிரணி பந்து வீச்சாளர்களை ஸ்தம்பிக்க வைத்தார். அவருக்கு இணையாக ஷிகர் தவானும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 46 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் வானவேடிக்கை காட்டிவந்த பிரித்வி ஷாவும் 82 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.