ஐபிஎல் 2021: ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது ஹைதராபாத்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடர், செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), டேவிட் மலான் (பஞ்சாப்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதர இங்கிலாந்து வீரர்களான மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கரண், டாம் கரண், ஜார்ஜ் கார்டன், ஈயன் மார்கன், கிறிஸ் ஜார்டன், அடில் ரஷித், லியம் லிவிங்ஸ்டன், ஜேசன் ராய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜானி பேர்ஸ்டோவிற்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸின் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.