ஐபிஎல் 2021: தனி ஒருவனாக அணியை கரை சேத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே நிலைத்து விளையாடி 33 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது.
டெல்லி அணி தரப்பில் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த், ஹெட்மையர் என முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 19.1 ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.