ஐபிஎல் மெகா ஏலம் 2022: லிவிங்ஸ்டோனை போட்டி போட்டு எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதுவரை நடந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோனவர் இந்திய வீரர் இஷான் கிஷன். ரூ.15.25 கோடிக்கு அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. தீபக் சாஹரை அவர் ஏற்கனவே விளையாடிய சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2ஆவது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.
இந்த ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.11.50 கோடிக்கு விலைபோனது அனைவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன், இந்த முறை 5 அணிகளால் போட்டி போடப்பட்டு கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.
லியாம் லிவிங்ஸ்டோனுக்கு ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்ட, சிஎஸ்கேவிற்கும் கேகேஆருக்கும் இடையே போட்டி நிலவியது. சிஎஸ்கே ஒரு கட்டத்தில் விலகிக்கொள்ள ரூ.4 கோடிக்கு மேல் கேகேஆருடன் பஞ்சாப் கிங்ஸ் போட்டி போட்டது. கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் அடித்துக்கொள்வதை பார்த்து, குஜராத் டைட்டன்ஸும் இந்த போட்டியில் இணைந்தது. ஆனால் எத்தனை அணிகள் போட்டிக்கு வந்தாலும் லிவிங்ஸ்டோனை விட்டுக்கொடுக்க விரும்பாத பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.11.50 கோடிக்கு எடுத்தது.
ஒரே ஆண்டில் அவரது மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் அவரது அதிரடியான பேட்டிங்கும், பன்முக பந்துவீசும் திறமையும் தான். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆடியபோது இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டோன், 43 பந்தில் 103 ரன்களை குவித்து மிரட்டினார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடியவர் மட்டுமல்லாது, எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆடக்கூடியவர் லிவிங்ஸ்டோன். மேலும் லெக் ஸ்பின்னரான இவர், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின்னும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஆஃப் ஸ்பின்னும் என பேட்ஸ்மேன்களை பொறுத்து பந்தை மாற்றி வீசக்கூடியவர்.