இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி தக்க வைத்த 4 வீரர்களாக ஜடேஜா, தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளனர்.
அவர்களை தவிர மீதமுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தின் மூலம் எடுக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக 24 வயது ஒடிசாவை சேர்ந்த வீரரான சுப்ரன்ஷு சேனாபதி என்கிற வீரரை தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்பெஷல் டிரெய்னிங்ற்காக அழைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பயிற்சியில் சுப்ரன்ஷு சேனாபதி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில் அவர் மெகா ஏலத்தில் சென்னை அணிக்காக எடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது 24 வயதான சுப்ரன்ஷு சேனாபதி ஒடிசா அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார். நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 275 ரன்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அவர் சதம் அடித்தும் அசத்தி இருந்தார்.
அதோடு அவர் இந்த தொடரில் 2 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கு முன்னர் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரிலும் 5 போட்டிகளில் 138 ரன்கள் அடித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்டை போன்று சென்னை அணியின் நிர்வாகிகளின் கவனத்தை இவரது பேட்டிங் ஸ்டைல் ஈர்த்ததன், காரணமாக தற்போது இவருக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதிலும் அவர் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.