ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, May 15 2022 19:12 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி நன்றாக தொடங்கிய நிலையில், அவரும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் நிலைத்து ஆடினார். 

அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெகதீசனும் நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த ருதுராஜ், 16வது ஓவரில் அதிரடியாக ஆட ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சி செய்தபோது ஆட்டமிழந்தார்.49 பந்தில் 53 ரன்கள் அடித்தார் ருதுராஜ்.

அதன்பின்னர் டெத் ஓவர்களிலும் ஷிவம்துபே, தோனி ஆகிய யாரையுமே அடித்து ஆட அனுமதிக்கவில்லை குஜராத் பவுலர்கள். கடைசி வரை களத்தில் நின்ற ஜெகதீசன், 33 பந்தில் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 133 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் வழக்கம்போலவே அருமையாக பந்துவீசி, சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் கட்டுக்குள்ளேயே வைத்து 133 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விருத்திமான் சஹா - சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதன்பின் 18 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் பதிரான வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஹா அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் 19.1 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை