ஐபிஎல் மெகா ஏலம் 2022: பேட்டர் & ஆல்ரவுண்டர்கள்; ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டிய அணிகள்!

Updated: Sat, Feb 12 2022 14:28 IST
IPL 2022 Mega Auction 2022: Batter & Alrounders Set Players Sold (Image Source: Google)

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.

இதையாடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது செட் வீரர்களுக்கான ஏலம் பரபரப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக இடம்பெற்ற இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 4.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

பின்னர் இந்திய வீரர் ராபீன் உத்தப்பாவை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஏலத்தி வாங்கியது. 

இதையடுத்து இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தட்டித்தூக்கியது. 

பின்னர் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை அவரது அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வில்லை. 

அடுத்ததாக இந்திய தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அவர்களது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எந்த அணிகளும் ஏலத்தில் கேட்கவில்லை. 

அதன்பின் வெஸ்ட் இண்டீஸின் அனுபவ ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவிற்கு சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு டுவைன் பிராவோவை மீண்டும் அணிக்குள் இழுத்தது. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் ராணாவை ரூ.8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது. 

அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.8.75 கோடிக்கு ஜேசன் ஹோல்டரை கைவசப்படுத்தியது. 

பின்னர் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வில்லை. 

இதையடுத்து கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு ஆர்சிபி - எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆர்சிபி அணி ரூ.10.75 கோடிக்கு மீண்டும் அவரை அணிக்குள் இழுத்தது. 

அவரைத் தொடர்ந்து இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவிற்கு மும்பை, லக்னோ, ராஜஸ்தான் அணிகள் ஏலம் கேட்டன. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.5.75 கோடிக்கு தீபக் ஹூடாவை ஏலத்தில் எடுத்தது.

அதன்பின் இலங்கை ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்காவிற்கு ஆர்ச்பி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏல நடத்துநரான ஹக் எட்மீட்ஸ் நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதனால் ஏலம் நடைபெறும் இடம் பெரும் பரபரப்புக்கு உள்ளனது. 

அதன்பின் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் உடனடியாக வந்த அவருக்கு முதலுதவி செய்தனர். மேலும் அவர் தற்போது நலமாக உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை