ஐபிஎல் 2022: ஜேசன் ராய்க்கு மாற்றுவீரராக குர்பாஸ் ஒப்பந்தம்!

Updated: Thu, Mar 10 2022 10:47 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் உள்ளனர். ஏலத்தில் ஜேசன் ராய், மேத்யூ வேட், டேவிட் மில்லர், லாக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களையும், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ஜெயந்த் யாதவ், ஆகிய இந்திய ஆல்ரவுண்டர்கள் மற்றும் வருண் ஆரோன், முகமது ஷமி, ரிதிமான் சஹா ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருந்தாலும், டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு மாற்று ஆப்சனே இல்லாத அளவிற்கு வெறும் ஷுப்மன் கில் மற்றும் ஜேசன் ராய் ஆகிய 2 வீரர்களை மட்டுமே எடுத்து வைத்திருந்த நிலையில், 2 மாத காலம் பபுளில் இருக்கமுடியாது என்று கூறி ஜேசன் ராய் ஐபிஎல்லில் இருந்து விலகினார். 

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராயை ரூ.2 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அவர் விலகியதையடுத்து, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இழந்த டைட்டன்ஸ் அணி, அவருக்கு மாற்று வீரராக யாரை எடுப்பது என யோசித்துவந்தது. 

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸை ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸ், 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 534 ரன்கள் அடித்துள்ளார். இவர் பெரிய அனுபவம் இல்லாதவர் என்றாலும், அதிரடியாக ஆடக்கூடிய திறமையான பேட்ஸ்மேன் ஆவார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை