ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!
நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தியா கண்டெடுத்த இளம் வீரர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உம்ரான் மாலிக் மிக முக்கியமானவர். தொடக்கத்தில் சற்று ரன்களை வழங்கினாலும், வேகத்தில் எவ்வித சமரசமும் அவர் செய்துகொள்ளவில்லை. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசி வருகிறார் உம்ரான் மாலிக்.
நடப்பு சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இஷான் கிஷனுக்கு மணிக்கு 157 கி.மீ. வேகத்தில் பந்துவீசினார். இதுவே இந்த சீசனின் அதிவேகப் பந்தாக உள்ளது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மற்றொரு சாதனையைப் புரிந்துள்ளார் உம்ரான் மாலிக். இந்த ஆட்டத்தில் அவர் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை அவர் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, 2017-இல் 23 வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார் ஜாஸ்பிரித் பும்ரா.
குறைந்த வயதில் 20 ஐபிஎல் விக்கெட்டுகள்:
- உம்ரான் மாலிக் - 22 வயது 176 நாள்கள் (ஐபிஎல் 2022)
- ஜாஸ்பிரித் பும்ரா - 23 வயது 165 நாள்கள் (ஐபிஎல் 2017)
- ஆர்.பி. சிங் - 23 வயது 166 நாள்கள் (ஐபிஎல் 2009)
- பிரக்யான் ஓஜா - 23 வயது 225 நாள்கள் (ஐபிஎல் 2010)