ஐபிஎல் 2023: ஃபாஃப், கோலி அரைசதம்; பஞ்சாபிற்கு 175 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மாலை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையடாவுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிகான இரு அணியிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி பஞ்சாப் கிங்ஸை சாம் கரனும், ஆர்சிபியை விராட் கோலியுடன் வழிநடத்துகின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் இம்பேக்ட் பிளேயராக ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் விக்கெட்டை இழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இவரும் முதல் விக்கெட்டிக்கு 137 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் அமைத்தனர். அதன்பின் 59 ரன்களில் விராட் கோலி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தையே அடிக்க முயற்சித்து ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.