ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வரும் 64ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது.
அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பிரித்வி ஷா 56 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதற்கிடையில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரைலீ ரூஸோவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதையடுத்து ரூஸோவுடன் இணைந்த பிலிப் சால்ட் வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதிலும் இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஹர்ப்ரீத் பிரார் வீச, அந்த ஓவரில் இருவரும் இணைந்து 23 ரன்களைக் குவித்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரைலீ ரூஸோவ் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 82 ரன்களையும், பிலிப் சால்ட் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 22 ரன்களையும் சேர்த்தனர்.