ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதனால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் உடன் பிரிதிவி ஷா ஓப்பனிங் இறங்கினார். கடந்த மேட்சில் பூஜ்யத்தில் அவுட் ஆன பிரிதிவி இம்முறை 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மனிஷ் பாண்டேவும் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்திருந்த அவர், சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். யஷ் துல் 2 ரன்கள் ரோவ்மென் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் என மிடில் ஆர்டரும் கைகொடுக்க தவறினாலும், வார்னர் தனியாளாக போராடினார்.
இறுதி ஓவர்களில் அக்சர் படேல் அவருக்கு பக்கபலமாக அமைந்தார். வார்னர் நிதானத்தை கடைபிடிக்க, அக்சர் ஆக்ரோஷம் காட்டினார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் ரன்கள் விரைவாக உயர்ந்தது. 22 பந்துகளில் அரைசதம் கடத்த அக்சர், அடுத்த இரண்டு பந்துகளில் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கடுத்த இரண்டாவது பந்தே 51 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார். ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் போரல் 1 கேட்ச் ஆக, குறிப்பிட்ட 19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்களை இழந்தது டெல்லி அணி. இறுதியில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தலா 3 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ரோஹித் சர்மா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அவருக்கு பக்கபலமாக இஷான் கிஷானும் பவுண்டரிகளை விரட்ட முதல் 6 ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழபின்றி 68 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
இதற்கிடையில் ரோஹித் சர்மா 718 நாட்கள், 25 இன்னிங்ஸ்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அடுத்தடுத்து சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய திலக் வர்மா 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவும் ரன்கள் ஏதுமின்றி முகேஷ் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் பரோலின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இதில் 19ஆவது ஓவரில் கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட் தலா ஒரு சிக்சரை விளாச மும்பை அணியின் வெற்றியும் ஏறத்தாழ உறுதியானது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.