ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்?

Updated: Tue, Mar 28 2023 19:21 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. தொடக்க போட்டியும், இறுதிப்போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அணி ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

கடந்த சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, முதல்முறையாக புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்திற்கு சென்றது. இதனால், இம்முறை அதிரடியாக செயல்பட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய இடத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது.

இந்நிலையில், மும்பை அணியின் நட்சத்திர பௌலர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகிவிட்டதால், அந்த அணி பந்துவீச்சு துறையில் பின்னடைவை சந்திக்கும் நிலை இருக்கிறது. இந்நிலையில், பும்ராவின் இடத்தை உள்ளூர் வீரரை வைத்து நிரப்ப மும்பை இந்தியன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த உள்ளூர் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர்தான். இவர் 2021ஆம் ஆண்டு முதலே அணியில் இடம்பிடித்து வருகிறார். இருப்பினும், லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டில் கோவா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அர்ஜுன் அபாரமாக செயல்பட்டதால், அவர் இம்முறை பும்ராவுக்கான மாற்று வீரராக களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் மகன் என்பதால்தான், அவரை மும்பை அணியில் சேர்த்தார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது. இந்நிலையில், அந்த விமர்சனத்தை எல்லாம் புறந்தள்ளி மும்பை அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை