ஐபிஎல் 2023: ஷாருக், பிரார் இறுதிநேர அதிரடியில் 179 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பனுகா ரஜபக்ஷா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோனும் 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்து. அதன்பின் ஷிகர் தவானுடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 21 ரன்களில் ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஷிகர் தவானும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத்தொடர்ந்து வந்த சாம் கரண், ரிஷி தவான் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதில் ஹர்ஷித் ராணா வீசிய 20ஆவது ஓவரை எதிர்கொண்ட ஷாரூக் கான் ஒரு சிச்கர், இரண்டு பவுண்டரிகளை, ஹர்ப்ரீத் பிரார் ஒரு சிக்சரையும் விளாசி அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 21 ரன்களையும், ஹர்ப்ரீத் பிராச்ர் 17 ரன்களையும் எடுத்தனர். கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.