ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கலந்து கொள்ள அதில் ஹைதராபாத் மற்றும் குஜராத் இரு அணிகளில்தான் வீரர்கள் யாரும் காயமடையாமல் ஏலத்தில் வாங்கியது போல எல்லோரும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் மற்ற எல்லா ஐபிஎல் அணிகளிலும் குறைந்தது ஒருவராவது காயம் அடைந்திருக்கிறார். இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அணியாக மும்பை அணி பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் இருவரையும் இழந்திருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் சென்னை அணி தனது இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரியை இழந்திருக்கிறது. இவர் பவர் பிளே பந்துவீச்சாளர் என்பதால், இவரை முதலில் ஓவர்களை வீசவைத்து பின்பு வெளிநாட்டு பந்துவீச்சாளரை இம்பேக்ட் பிளேயர் ரூலில் டெத் ஓவர்களுக்கு கொண்டுவர சென்னை அணி திட்டமிட்டு இருந்தது. தற்பொழுது இவர் காயம் அடைந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியதால் இந்த திட்டத்தில் சென்னை அணி பின்தங்கி விட்டது.
முகேஷ் குமார் கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 19 ரன்களை விட்டுக் கொடுத்து மும்பைக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது இவரது மிகச் சிறந்த பந்துவீச்சாக பதிவாகி இருக்கிறது. இன்று ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் இவரது இடத்திற்கு யாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொண்டு வர இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்பொழுது இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய ராஜஸ்தானை சேர்ந்த முகேஷ் சௌத்ரியை போலவே இடது கையில் பந்து வீசக்கூடிய 20 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங்கை பிடித்து வந்திருக்கிறது. ஆகாஷ் சிங் 2020 மற்றும் 21 ஆகிய இரண்டு ஆண்டுகள் ராஜஸ்தான் அணியில் இருந்தவர்.
இந்த காலகட்டத்தில் இவர் ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடிய நான்கு ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் தந்து இருக்கிறார். அந்த ஒரு போட்டியும் இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகத்தான் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவருக்கு அதே சென்னை அணியில் இப்பொழுது இடம் கிடைத்திருக்கிறது.