ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ருதுராஜ், மாஸ் காட்டிய தோனி; இமாலய இலக்கை நிர்ணயித்து சிஎஸ்கே!

Updated: Mon, Apr 03 2023 21:26 IST
Image Source: Google

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் திருவிழா நடக்கிறது. அதுவும், 1,426 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆட துவங்கினர். இதில், கொஞ்சம் கூடுதலாக நல்ல ஃபார்மில் இருக்கும் ருத்துராஜ் முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில்  தனது வான வேடிக்கையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். மார்க் வுட், கிருஷ்ணப்பா கவுதம், ஆவேஷ் கான், குர்ணல் பாண்டியா என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

கிருஷ்ணப்பா கவுதம் ஓவரில் கெய்க்வாட் ஒரே ஓவரில் 3 சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்தது. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். 

மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 110 ரன்களைச் சேர்த்தனர். பின் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த கெய்க்வாட் ஆட்டமிழ, சிறுது நேரத்திலேயே டெவான் கான்வே 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் வந்த ஷிவம் துபோ தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், பின் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசிய கையோடு ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மொயீன் அலி 19 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு ஒரு சில சிக்சர்களை பறக்கவிட, மறுபக்கம் ரவீந்திர ஜடேஜா வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் எம் எஸ் தோனி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதையடுத்து சந்தித்த இரண்டாவது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டு மைதானத்தை குதுகலப்படுத்தினார். மேலும் அந்த சிக்சரின் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்த 8ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

அதன்பின் ஹாட்ரிக் சிக்சர் அடிக்கும் முனைப்பில் விளையாடிய தோனி அந்த பந்தில் ரவி பிஸ்னோயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. லன்கோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை