ஆர்சிபி எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் - ரோஹித் சர்மா!

Updated: Sun, May 21 2023 23:07 IST
IPL 2023: Did a great favour to RCB last year, hope the result there goes our way, says Rohit Sharma (Image Source: Google)

மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும் மும்பை அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 201 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசி போட்டியை அபாரமாக பினிஷ் செய்தார்.

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கேமரூன் கிரீன்(100) மற்றும் சூரியகுமார் யாதவ்(25) இருவரும் களத்தில் நின்றனர். 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அத்துடன் 16 புள்ளிகள் பெற்று தற்காலிகமாக நான்காவது இடத்திலும் இருக்கிறது. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாக வேண்டும் என்றால், அடுத்து நடைபெறும் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவ வேண்டும். 

ஹைதராபாத் அணியை வீழ்த்திய பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், “இன்று வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலையில் மட்டுமே களமிறங்கினோம். மற்றது நடக்குமா? என்பது பற்றி நாங்கள் கவலைகொள்ளவில்லை. எங்களது கட்டுக்கோப்பில் என்ன இருக்கிறதோ அதை தான் எங்களால் கட்டுப்படுத்த முடியும். மற்ற விஷயங்கள் நடக்கும் என்று நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும்.

இந்த போட்டிக்கு முன்பு நான் எவரிடமும் எதுவும் பேசவில்லை. பிளே-ஆப் சுற்றுக்குள் நாங்கள் சென்றால், அதற்கு காரணம் அணியில் இருக்கும் வீரர்கள் தான். ஒருவேளை நாங்கள் செல்லவில்லை என்றால், அதற்கு யாரையும் காரணம் காட்டாமல் வெளியேறி விட வேண்டும். அடுத்த வருடம் இன்னும் பலத்துடன் களமிறங்க முற்படுவோம். கடந்த சீசனில் கடைசியாக நாங்கள் பெற்ற வெற்றி ஆர்சிபி அணிக்கு சாதகமாக இருந்தது. இந்த வருடம் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவை ஆர்சிபி அணி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் இந்த சீசனை சரியாக ஆரம்பிக்கவில்லை. அதன் பிறகு மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றோம். பின்னர் முக்கியமான கட்டத்தில் தோல்வியை தழுவியது எங்களை பின்னடைவில் தள்ளியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. அப்போட்டியை வெற்றி பெற்றிருக்கலாம் அதேபோல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியும் எங்களது கையில் இருந்தது. 

இதிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். முடிந்ததைப் பற்றி பெரிதளவில் யோசிக்க தேவையில்லை என்றாலும், சரியாக செயல்பட்டிருக்க வேண்டிய போட்டிகள் அவை. சில நேரங்களில் இது போன்ற விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையாது. இதுவும் ஐபிஎல் போன்ற தொடரில் நடக்கக் கூடியவை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை