ஐபிஎல் 2023: ஆட்டம் காட்டிய மழை; ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்ட இறுதிப்போட்டி!
ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மழை நின்ற நிலையில் நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். பிசிசிஐயின் உயர் நிர்வாகிகளும் மைதானத்திற்கு வந்து களத்தை சோதித்தனர்.
அப்போது 9:35க்கு போட்டியை தொடங்கி 20 ஓவர் முழுவதையும் நடத்தலாம் என்றும் நடுவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த நிலையில் எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கினால் எவ்வளவு ஓவர்கள் குறைக்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியானது. அதன்படி, போட்டி 9:45-க்கு தொடங்கினால் 19 ஓவர் ஆட்டமாக நடைபெறும்.
அதுவே 10 மணிக்கு தொடங்கினால் 17 ஓவர் ஆட்டமாக நடைபெறும். 10.15 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர் ஆட்டமாக ஓவர்கள் குறைக்கப்படும். இரவு 11:30 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் ஒன்பது ஓவராக குறைக்கப்படும். இரவு 12.06 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் 5 ஓவராக நடத்தப்படும். ஆனால் அதன் பிறகும் போட்டி தொடங்க முடியவில்லை என்றால் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் இரவு போட்டி நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டு ரிஸர்வ் டே-வான நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியனை கொண்டாட ரசிகர்கள் மேலும் ஒருநாள் காத்திருக்க வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை நாளைய போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.