ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?

Updated: Mon, May 29 2023 21:20 IST
Image Source: Google

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டு ரிஸர்வ் டே-வான இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் அதே பிளேயிங் லெவனில் களமிறங்குகின.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் விருத்திமான் சஹா மற்றும் ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில், சஹா ஆகியோர் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தீபக் சஹார் தவறவிட்டார். இதனைப் பயன்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அசத்தினார். 

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 39 ரன்கள் எடுத்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கின் மூலம் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சாய் சுதர்ஷன் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் விருத்திமான் சஹா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

பின் 54 ரன்கள் எடுத்திருந்த சஹாவின் விக்கெட்டை தீபக் சஹார் கைப்பற்றினார். ஆனால் அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் சிஎஸ்கேவின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இறுதியில் அவருடன் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடி காட்ட 19ஆவது ஓவரிலேயே குஜராத் அணி 200 ரன்களை எட்டியது. அதன்பின் பதிரானா வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளிலும் இமால சிக்சர்களை பறக்கவிட்ட சாய் சுதர்சன் சதமடிப்பார் என எதிபார்க்கப்பட்ட நிலையில் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 96 ரன்களைச் சேர்த்து வெறும் 4 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 21 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரானா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை