ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்றுவரும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற ஜோஸ் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்களைச் சேர்த்திருந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்க, ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மது ஆகியோரது சுழலில் சிக்கி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா ஓரளவு தாக்குப்பிடித்தாலும், 17.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பறினார்.
இதயடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் சஹாவுடன் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஹா 41 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 14 புள்ளிகளைப் பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்தது.