எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, May 22 2023 13:18 IST
IPL 2023: GT skipper Hardik Pandya lauds Shubman Gill for match-winning ton against RCB (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில்  விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “எங்களது அணி வீரர்கள் அனைவருமே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர். பிளே ஆஃப் சுற்றிற்கு நாங்கள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தாலும் வெற்றியுடன் நல்ல முமென்ட்டத்தோடு அடுத்த சுற்றுக்கு செல்ல விரும்பினோம். அந்த வகையில் இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. 

ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ஆட்டம் எங்கள் அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. இந்த போட்டியில் 197 ரன்கள் பெங்களூரு அணி குவித்த போது எங்களால் சேஸிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். ஆனாலும் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். இந்த போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

அதே வேளையில் சேசிங்கின் போது எங்களது வீரர்களும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றியை விட வேறு என்ன நான் எங்களது அணி வீரர்களிடம் இருந்து கேட்க முடியும். கடந்த ஆண்டு நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். எல்லாமே நாங்கள் நினைத்தது போன்று சென்றது. இந்த ஆண்டு சில சவால்களை எதிர்பார்த்தோம்.

எந்த அணியாவது எங்களுக்கு சவாலை அளிக்குமா? என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெற்ற வெற்றிக்கு அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே காரணம்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை