இந்த வருடம் எங்ளிடம் சிறந்த ஃபினிஷர் இருக்கிறார் - ஆண்ட்ரே ரஸல்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 42 ரன்களையும் எடுத்து அசத்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆண்ட்ரே ரஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய ஆண்ட்ரே ரஸல், “இந்தப் பிட்ச்சில் பால் சற்று நின்று வந்தது. ஆகையால் கணித்து அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். அந்த திட்டத்தில் தெளிவாக இருந்தோம். ஒருவேளை பந்துவீச்சாளர்கள் தங்களது லென்த்தை மிஸ் செய்தால் அப்போது பேட்டை சுழற்றலாம் என்றும் நானும் ரிங்கு சிங் இருவரும் பேசிக்கொண்டோம்.
கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இருந்தபோது, இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று தோன்றியது. மேலும் நான் அடிக்க செல்கிறேன் என்று ரிங்கு சிங் இடம் கூறினேன். முதல் பந்தை பெரிதாக கஷ்டப்படாமல் தூக்கி அடித்தேன். சிக்ஸர் சென்றது. இரண்டாவது பந்தை பாயிண்ட் திசையில் தூக்கி அடித்தபோது அதுவும் சிக்ஸர் சென்றதால் வேலை எளிதாகி விட்டது. நானே உள்ளே நின்று ஆட்டத்தைப் பினிஷ் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் தான் சிறந்த ஃபினிஷர் இருக்கிறாரே.
ஒருவேளை பந்தை தவறவிட்டால் என்ன செய்வது என்று நான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் பேசிக்கொண்டோம். உடனடியாக ரன் ஓடி வந்துவிடவா? என்று அவர் கேட்டார். நானும் சரி என்று கூறி விட்டேன். அப்படித்தான் அந்த ரன் ஓடும்பொழுது ரன் அவுட் ஆனது.எனக்கு ரிங்கு சிங் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. கடைசி பந்து வரை சென்றாலும் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுத்து விடுவார் என்று நம்பினேன். இந்த வருடம் அவர் அணிக்காக செய்து கொடுக்கும் செயல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பினிஷிங் ரோலில் எனக்கு கம்பெனி கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர் ஆடும் விதத்தினால் ஆட்டத்தின் மொத்த அழுத்தமும் பந்துவீச்சாளர்களுக்கு சென்று விடுகிறது. ரிங்கு சிங் கொல்கத்தா அணியுடன் கலந்த சில வருடங்களாகவே பயணித்து வருகிறார். கடின உழைப்பாளி. மைதானத்தில் பயிற்சியில் முழு கவனத்துடன் இருப்பார். அப்படியே மைதானத்திற்கு வெளியே சென்றால், சந்தோசமாக சிரித்து மகிழ்வார். ஆகையால் அதிக நேரங்கள் நான் அவருடன் பழகுவதற்கு நினைப்பேன். நல்ல மனநிலை அவரிடம் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.