ஹர்ஷல் படேல் பந்துவீச்சை தடுத்த நிறுத்திய நடுவர்கள்; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு மைதானம் எப்போதுமே ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
சிஎஸ்கே அணியை 180 ரன்களுக்குள் சுருட்டி, அதனை சேஸிங் செய்ய வேண்டிய திட்டத்தில் ஆர்சிபி வீரர்கள் இருந்தனர். ஆனால் இந்த திட்டத்தை, ரஹானே, கான்வே, சிவம் துபே ஆகியோர் உடைத்தனர். இந்த கூட்டணி ஆர்சிபி பந்துவீச்சை சிதற அடித்தது.
இந்த நிலையில், 18வது ஓவரில் எல்லாம் சிஎஸ்கே அணி 200 ரன்களை கடந்தது. இந்த நிலையில், ஆர்சிபி அணியின் சிராஜ் 19வது ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். அவரும் குறைவாக ரன்களை விட்டு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஹர்சல் பட்டேல் பரபரப்பான கட்டத்தில், பந்தை பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் உயரமாக வீசினார். உடனே நடுவர் இதற்கு எச்சரிக்கை கொடுத்தனர். ஆனால் மீண்டும் பந்தை பேட்ஸ்மேன் இடுப்புக்கு மேல் வீசியதால், நடுவர்கள் ஹர்சல் பட்டேல் மேற்கொண்டு பந்துவீச தடை விதித்தனர்.
கிரிக்கெட் விதிப்படி ஒரு ஓவரில் 2 உயரமான நோ பால்களை வீசினால், அத்துடன், அவர் அந்த ஆட்டத்தில் ஓவரே வீச முடியாது. இதனால் ஹர்சல் பட்டேல் வீச வேண்டிய ஓவரை மேக்ஸ்வெல் வீசினார்.