ஐபிஎல் 2023: ஸ்டொய்னிஸ், மேயர்ஸ், பூரன் காட்டடி; பஞ்சாபிற்கு 258 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஆடிய தலா 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
மொஹாலியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தோள்பட்டை வலி காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, இரண்டாவது ஓவர்முதல் அதிரடி காட்டத் தொடங்கியது.
இதில் கேஎல் ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் அரைசதம் கடந்த கையோடு 7 பவுண்டரி 4 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதோனி 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சந்தித்த முதல் மூன்று பந்துகளையுமே பவுண்டரிகளுக்கு விளாசி தனது எண்ட்ரியைக் கொடுத்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக விளாசிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 73 ரன்களைக் குவித்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரனும் 19 பந்துகளில் 45 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வரலாற்றில் ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி அணி அடித்த 263 ரன்களே இதுவரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.