ஐபிஎல் 2023: ஹைதரபாத்தை பந்தாடி லக்னோ அசத்தல் வெற்றி!

Updated: Fri, Apr 07 2023 22:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், அன்மோல்பிரீத் சிங்கும் களமிறங்கினர். 

இதில், மயங்க் அகர்வால் 8 ரன்களில் கிளம்ப, ராகுல் திரிபாதி களத்துக்கு வந்து சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் வந்த முதல் பந்திலேயே போல்டாக, அவருக்கு பின் வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்களில் முடித்துக்கொண்டார்.

நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதியும் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப அணியின் ஸ்கோரில் பெரிய அளவில் எந்த முன்னேறமுமின்றி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ரன்களை சேர்த்து பரிதாபமாக விளையாடியது.வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களில் விக்கெட்டாகி பெவிலியன் சென்றடைய, ஆதில் ரஷித் 4 ரன்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த உம்ரான் மாலிக் ரன் எதுவும் எடுக்காமல் அவர்களுடன் ஐக்கியமானார். 

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. அப்துல் சமத் 21 ரன்களுடம், புவனேஸ்குமார் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.லக்னோ ஸ்பின்னர்ஸ் தரப்பில் குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கைல் மேயர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தீபக் ஹூடாவும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். 

அதன்பின் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த குர்னால் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்தனர். பின் 34 ரன்களில் குர்னால் பாண்டியா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இருப்பினும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை