ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ!

Updated: Sat, May 13 2023 19:31 IST
Image Source: Google

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான அன்மோல்ப்ரீத் சிங் 27 பந்தில் 36 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 13 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். கேப்டன் ஐடன் மார்க்ரம் 20 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஹென்ரிச் கிளாசன் 29 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் தன் பங்கிற்கு 25 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 182 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோவிற்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இலக்கி நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் 2 ரன்களிலும், குயின்டன் டி காக் 29 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் மான்கட் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மான்கட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இருப்பினும் அதுவரை ஹைதராபாத் அணியிடம் தான் இந்த வெற்றி இருந்தது. அப்போது ஆட்டத்தின் 16ஆவது ஓவரை வீசிய அபிஷேக் சர்மாவின் ஓவரில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதே ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அசததினார். 

இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டுமே லக்னோ அணி 31 ரன்களைக் குவித்து வெற்றிக்கு அருகே சென்றது. அதன்பின் பந்துவீசிய ஹைதராபாத் வீரர்களாலும் பூரனின் அதிரடி ஆட்டத்தை தடுக்கமுடியாமல் ரன்களை வாரி வழங்கினர்.  இதனால் லக்னோ அணி 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மான்கட் 64 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 44 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை