ஐபிஎல் 2023: விராட், லோமரோர் அரைசதம்; டெல்லிக்கு 182 டார்கெட்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்றுவரும் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிதது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்த மஹிபால் லோமரோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த விராட் கோலி, 55 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லோம்ரோர் 26 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மஹிபால் லோமரோர் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசியதுடன் 54 ரன்களைச் சேர்த்தார்.