ஐபிஎல் 16ஆவது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. இன்று பிற்பகல் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

Advertisement

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேப்பிட்டள்ஸும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் கைல் மேயர்ஸும் இறங்கினர். 

Advertisement

இதில் கேஎல் ராகுல் 12 பந்தில் 8 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய தீபக் ஹூடாவும் 18 பந்தில் பவுண்டரியே அடிக்காமல் வெறும் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்கம் முதலே அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசி சிக்ஸர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ் அரைசதம் அடித்தார். 38 பந்தில் 7 சிக்ஸர்களை விளாசிய கைல் மேயர்ஸ் 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் தான் லக்னோ அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 

அதன்பின்னர் நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட்டிங் ஆடி 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்தார். ஆயுஷ் பதோனி 7 பந்தில் 18 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் கிருஷ்ணப்பா கௌதம் சிக்ஸர் அடிக்க, நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 193 ரன்களை குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரித்வி ஷா 12 ரன்களை எடுத்த நிலையில் மார்க் வுட் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் அடுத்த பந்திலேயே அதேபோல் போல்டாகி நடையைக் கட்டினார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் 4 ரன்களோடு ஆட்டமிழந்தார். பின்னர் வார்னருடன் இனைந்த ரைலீ ரூஸோவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்திருந்த ரூஸோவ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பாவெலும் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் போராடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து 56 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தோல்வியும் உறுதியானது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் போதிய ரன்களைச் சேர்க்க முடியாத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, நடப்பு ஐபிஎல் சீசனில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News