ஐபிஎல் 2023: ஷமி அபாரம்; பவர்பிளேவில் பாதி அணியை இழந்த டெல்லி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 44ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வர்னர் - பிலீப் சால்ட் இணை களமிறங்க, குஜராத் தரப்பில் முகமது ஷமி பந்துவீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட பிலிப் சால்ட் அதனை பவுண்டரி அடிக்க முயற்சிக்க அது நேராக டேவிட் மில்லரிடம் கேட்ச்சாக சென்றது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பிரியம் கார்க் தனது பங்கிற்கு டேவிட் வார்னரை ரன் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து வந்த ரைலீ ரூஸொவ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினாலும், முகமது ஷமியின் இரண்டாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த மனீஷ் பாண்டே, முகமது ஷமி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த பிரியம் கார்க் அந்த ஓவரியின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் ஆறு ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து அமான் கான் - அக்ஸர் படேல் இணை குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடி வருகிறது.