ஐபிஎல் 2023: மொஹ்சின் கான் அபாரம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!

Updated: Tue, May 16 2023 23:47 IST
IPL 2023: Moshin Khan’s brilliant final over helps LSG beat MI by 5 runs! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 63ஆவது லீக் ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை களமிறங்கினர். இதில் தீபக் ஹூடா 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே இளம் வீரர் மான்கட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் பியூஷ் சாவ்லா வீசிய முதல் பந்திலேயே குயின்டன் டி காக் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் குர்னால் பாண்டியா - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், மேற்கொண்டு விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினர். அதன்பின் ஆட்டத்தின் 16 ஓவர்கள் முடிந்த நிலையில்  குர்னால் பாண்டியா 49 ரன்களை எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், கிறிஸ் ஜோர்டன் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 89 ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இனை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்பி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுபக்கம் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அரைசதம் கடந்த கையோடு 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் - நேஹல் வதேரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுக்க நினைத்தனர். 

ஆனால் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களை எடுத்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிட, அவரைத் தொடர்ந்து நேஹல் வதேரா 16 ரன்களிலும், விஷ்னு வினோத் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்ப்பட்டது. 

லக்னோ அணி தரப்பில் 19ஆவது ஓவரை நவீன் உல் ஹக் வீச அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் அந்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசினார். அதுமட்டுமின்று நே-பால் பவுண்டரியும் அந்த ஓவரில் கிடைத்ததால், கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

ஆனால் லக்னோ அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய மொஹ்சின் கான் அபாரமாக பந்துவீசி வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சிய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையமுடியும் என்ற இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை