எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது - ஷேன் பாண்ட்!

Updated: Wed, May 17 2023 14:17 IST
IPL 2023: Most Frustrating Thing Is Not Sticking To The Already Talked Plans, Says MI Bowling Coach (Image Source: Google)

நேற்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான முக்கியப் போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அதிர்ச்சிகரமாகத் தழுவியது. முதலில் விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறி பின்பு மிகச் சிறப்பாக விளையாடி 177 ரன்களை மூன்று விக்கட் இழப்புக்கு எடுத்தது. ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மும்பையை மிரள விட்டார்.

இதையடுது இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்துக்கு மீறிய ரண்களை வாரி வழங்கி விட்டார்கள். மும்பையின் தோல்விக்குப் பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணம்.

இதுகுறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் எங்களுடைய திட்டங்களில் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒட்டாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமான விஷயமாகும். மார்க்கஸ் போன்ற வீரர்களுக்கு இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஆனால் நாங்கள் பந்து வீச விரும்பிய இடங்களில் பந்தை வீசவில்லை.

நீங்கள் ஒரு குழு திட்டத்திற்கு செயல்படுகிறீர்கள் என்றால், நீங்கள் எந்தப் பகுதியில் பேட்ஸ்மேனை அடிக்க விட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு விட வேண்டும். அவர்களுக்கு முடிந்தவரை அடிப்பதை கடினமாக வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மார்க்கஸ் நேற்று நேராகத் தரையில் அடிக்க முயற்சி செய்து விளையாடுவார் என்று எங்களுக்குத் தெரியும். அதற்கேற்றபடிதான் எங்கள் பந்துகளை வீசினோம். ஆனால் அவருடைய இன்னிங்ஸ்தான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

எங்களுடைய திட்டம், நாங்கள் பின்னால் வேலை செய்வது, விளையாட்டை எப்படி மதிப்பாய்வு செய்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். ஆனால் களத்தில் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையே செய்கிறோம். இதைத்தான் ஏற்கவே முடியவில்லை. என் பக்கப்பார்வையில் இருந்து இது மிக மிக ஏமாற்றம். நாங்கள் ஆட்டத்தின் 15ஆவது ஓவர் வரை சிறப்பாக இருந்தோம். நாங்கள் விரும்பியதை வழங்கினோம். 

ஆனால் ஒரே ஒரு வீரர் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். இதையேதான் முன்பு ரஷீத் கான் செய்தார், இப்பொழுது மார்க்கஸ் செய்திருக்கிறார். அப்பொழுது அதற்கு நாங்கள் விலை கொடுக்கவில்லை இப்பொழுது கொடுக்க வேண்டியதாய் போய்விட்டது. நல்ல வீரர்கள் ரன் எடுப்பதை உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது. 47 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுக்கும் வீரரை, 49 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுக்கும்படி செய்யலாம். இந்த 17 முதல் 20 ரன்கள்தான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை