ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது.
அதன்பின் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா 14 பந்துகளில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 60 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், திடீரென மோஹித் சர்மா ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியதாலும், மும்பை அணியின் மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததாலும் 171 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் முகமது ஷமி மற்றும் ரசீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மும்பை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தநிலையில், இப்போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “எங்களது அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுமே பயிற்சியின் போது மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். அந்த உழைப்பின் வெளிப்பாடு தான் போட்டிகளில் அவர்கள் சிறப்பாக பந்துவீச காரணம். சுப்மன் கில் நல்ல தெளிவான மனநிலையுடனும், தன்நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்.
இன்று அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எந்தவொரு இடத்திலும் அவசரத்தை காண்பிக்கவில்லை. அவரது திறன்களையே பயன்படுத்தி ரன்களை குவித்தார். யாரோ ஒருவரை த்ரோ போட வைத்து அடிக்கும் மாதிரி அவர் இன்று பவுலர்களை எதிர்கொண்டு அதிரடி காட்டினார்.
குஜராத் அணியின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார். இளம்வீரர்களுக்கான இடத்தினை வழங்கி அவர்களது திறனை வெளிப்படுத்த நாங்கள் வாய்ப்பினை தருகிறோம். அந்தவகையில் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.