ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? 

Updated: Fri, May 26 2023 12:26 IST
IPL 2023 Qualifier 2- Gujarat Titans vs Mumbai Indians, Match Preview, Expected XI! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது. 

இந்த நிலையில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2ஆவது குவாலிஃபையர் சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் மல்லுக்கட்டுகின்றன. இதில் வாகை சூடும் அணி 28-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும். நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றில் 10 வெற்றி 4 தோல்வியுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் சென்னையிடம் நெருங்கி வந்து தோற்ற குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது.

குஜராத் அணியில் சுப்மன் கில் ரன்குவிக்கும் எந்திரமாக மாறிவிட்டார். அவரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இதே போல் விஜய் சங்கர் , விருத்திமான் சஹா ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் 'அதிரடி மன்னன்' டேவிட் மில்லர் இந்த சீசனில் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் கைகொடுத்தால் நெருக்கடி குறையும். பந்துவீச்சில் ரஷித் கான் , முகமது ஷமி, மொகித் ஷர்மா மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் குஜராத்துக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும். இந்த சீசனில் இங்கு 7 லீக்கில் ஆடி அதில் 4-ல் வெற்றி கண்டுள்ளது.

அதேசமயம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 லீக் ஆட்டங்களில் தோற்று மந்தமாக தொடங்கினாலும் சரியான நேரத்தில் எழுச்சி பெற்று விட்டது. சூர்யகுமார் யாதவ் , ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சூப்பர் ஃபார்மில் உள்ளனர். குஜராத்தின் 'சுழல் சூறாவளி' ரஷித்கானை சமாளிப்பதில் சூர்யகுமார் கில்லாடி. ஐபிஎல் தொடரில் அவரிடம் ஒரு முறை கூட ஆட்டமிழக்காத சூர்யகுமார் அவரது பந்து வீச்சில் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்துள்ளார். 

அவ்வப்போது நன்றாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்தாலே மும்பையின் கை ஓங்கி விடும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா, வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் நம்பிக்கை அளிக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் 7ஆவது முறையாக இறுதிசுற்றை எட்டும். இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் வரிந்துகட்டுவதால் கோலோச்சப்போவது யார்? என்பதை கணிப்பது கடினம். ஆடுகளத்தை பொறுத்தவரை இங்கு 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களின் ஜாலம் மேலோங்கி இருக்க வாய்ப்புள்ளது.

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, தர்ஷன் நல்கண்டே, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை