ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை பந்தாடி ராஜஸ்தான் அபார வெற்றி!

Updated: Sun, Apr 02 2023 19:32 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

அதன்படி ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடி காட்டிய இந்த இணையை 6வது ஓவரில் ஃபசல்ஹக் பாரூக்கி பிரித்து பட்லரை 54 ரன்களில் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 54 ரன்களில் அவுட்டானார்.

தேவ்தட் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களிலும் விக்கெட்டாக மற்றொருபுறம் சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் 19வது ஓவரில் நடராஜனால் 55 ரன்களில் விக்கெட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிரெண்ட் போல்ட் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் , அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோரை அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி வீழ்த்தி அசத்தினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் - ஹாரி ப்ரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தது. பின் 13 ரன்களில் ஹாரி ப்ரூக்கும், ஒரு ரன்னில் வாஷிங்டன் சுந்தரும், 8 ரன்களில் கிளென் பிலீப்ஸும் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வாலும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து வந்த அப்துல் சமாத் - ஆதில் ரஷித் இணை அதிரடியாக விளையாடினர். பின் ஆதில் ரஷித் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, புவனேஷ்வர் குமார் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த உம்ரான் மாலிக் யாரும் எதிர்பாரா வகையில் இரண்டு இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்தினார். 

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை