சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2019 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் இளம் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறார். 2019ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இவர் இடம்பெற்றிருந்தாலும் அந்த சீசனில் பிளேயிங் லெவலில் விளையாட வைக்கப்படவில்லை. ஆகையால் இந்த சீசனில் தான் இங்கே அறிமுகமாகிறார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் போட்டிக்கு முன்பாக, முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப்போவது குறித்து தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் ருத்துராஜ். இதுகுறித்து பேசிய அவர், “இந்த சீசன் ஹோம் மற்றும் அவே முறைப்படி போட்டிகள் நடக்கும் என்று கேள்விப்பட்ட அடுத்த நிமிடமே, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப்போகிறோம் என்கிற ஆர்வம் எனக்குள் தொற்றிக்கொண்டது.
புதிதாக சீரமைக்கப்பட்ட மற்றும் கூடுதலாக புதிய அரங்குகள் கொண்டுள்ள இந்த சேப்பாக்கம் மைதானத்தில் முழு ரசிகர்களும் நிறைந்திருக்கும்பொழுது களமிறங்கினால் எப்படி இருக்கும் என்பதை பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன். அது நிறைவேற்றப்பபோகிறது என்று நினைக்கும் பொழுது உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இணைந்த முதல் சீசனில் இருந்து இதற்காக காத்திருந்தேன் .
ஆறாவது வீரர் வரை மட்டுமே பேட்டிங் இருந்தாலும், 11ஆவது வீரரும் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் நல்ல துவக்கம் கிடைத்தால் மட்டுமே அதை பெரிய ஸ்கோர் ஆக எடுத்துச் செல்ல முடியும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டிகளும் சிறப்பான துவக்கம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே எனது அணுகுமுறை இருக்கும். அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் எப்படிப்பட்டவர் என்பதை நான் கவனம் செலுத்துவது இல்லை. இந்த அணுகுமுறை எனக்கு இதுவரை உதவியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.