ஐபிஎல் 2023: சாய் சுதர்சன் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது குஜராத்!

Updated: Tue, Apr 04 2023 23:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று விளையாடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 

களத்தில் பொறுப்புடன் நின்று விளையாடிய சர்ஃபராஸ் கான் நிதானமாக விளையாடி 34 பந்தில் 30 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் அபிஷேக் போரெல் 11 பந்தில் 20 ரன்கள் அடித்து அவரும் ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அக்ஸர் படேல் நின்று ஆடி டெத் ஓவரில் அடித்து ஆடி 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் தந்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய விருத்திமான் சஹா 14 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 

அவரைத் தொடார்ந்து ஷுப்மன் கில்லும் 14 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் நோர்ட்ஜேவின் அடுத்த ஓவரில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப குஜராத் அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் - விஜய் சங்கர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், 4ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின் விஜய் சங்கர் 29 ரன்களை எடுத்திருந்த போது மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் 44 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் போக்கை குஜராத் டைட்டன்ஸ் பக்கம் திருப்பினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் 48 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களையும், டேவிட் மில்லர் 16 பந்துகளில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களையும் சேர்க்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை