ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!

Updated: Sat, Apr 29 2023 23:12 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 40ஆவது லீக் ஆடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 10 ரன்களிலும், ஏய்டன் மார்கம் 8, ஹாரி ப்ரூக் 0 ரன்களிலும் அவுட்டானது அந்த அணிக்கு அவ்வளவு நல்ல தொடக்கமில்லை. இருந்தாலும் மறுபுறம் தனியொரு ஆளாக நின்று அபிஷேக் ஷர்மா வந்ததும் கிளம்பும் தன் அணி பேட்ஸ்மேன்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே 36 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.

அவரும் அவுட்டாக 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 109 ரன்களை சேர்த்தது. அபிஷேக் ஷர்மாவுக்குப்பிறகு, ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஹைதராபாத் 197 ரன்களை குவித்தது. அகேல் ஹொசைன் 16 ரன்களுடனும், ஹென்ரிச் கிளாசென் 53 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து இணைந்த பிலிப் சால்ட் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பிலிப் சால்ட் 29 பந்துகளில் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷும் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலீப் சால்ட் 59 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மணீஷ் பாண்டேவும் ஒரு ரன்னுக்கு நடையைக் கட்டினார். 

அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷும் 6 சிக்சர், ஒரு பவுண்டரி என 63 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து வந்த பிரியாம் கார்க், சர்ஃபராஸ் கான் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி, நடப்பு சீசனில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை