ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி 10 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த அபிஷேக் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 67 ரன்களைச் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - அப்துல் சமத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 28 ரன்களை எடுத்திருந்த அப்துல் சமாத் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழ்ழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஹென்ரிச் கிளாசென் 25 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.