ஐபிஎல் 2023: விஜய் சங்கர் காட்டடி, சுதர்சன் அரைசதம்; கேகேஆருக்கு இமாலய இலக்கு!

Updated: Sun, Apr 09 2023 17:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. 

அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ரஷித் கான் அணியை வழிநடத்துகிறார் .

அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விருத்திமான் சஹா 17 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் - அபினவ் மனோகர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் மனோகர் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் நடப்பாண்டில் அவரது இரண்டாவது அரைசதம் இதுவாகும்.

அதன்பின் 53 ரன்களில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினார். இதன்மூலம் 21 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அதுமட்டுமில்லாமர் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விஜய் சங்கர் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 63 ரன்களை விளாசினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை